மந்தாரக்குப்பம் வாலிபர் கொலை வழக்கு: கடலூர் மாவட்ட பா.ஜனதா மகளிரணி செயலாளர் கைது

மந்தாரக்குப்பத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-13 16:55 GMT
மந்தாரக்குப்பம், 

வாலிபர் கொலை வழக்கு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் ஐ.டி.ஐ. நகரை சேர்ந்தவர் மொட்டை ராஜன் மகன் அருண்குமார்(வயது 35). இவர் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி மந்தாரக்குப்பம் அருகே என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் எதிரே கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து அருண்குமாரின் நண்பர்கள், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில், மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற ஜெயசூர்யா, தேவா, சுதாகர், தேவிஸ் பிரவீன் மற்றும் நீலகண்டன் ஆகியோர் ஒன்று சேர்ந்து அருண்குமாரை கழுத்தை அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராகுல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
அப்போது ராகுல் கொடுத்த வாக்குமூலத்தில், தனது சகோதரர் அரிகிருஷ்ணனுக்கும், அவருடைய நண்பரான அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அரிகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த எனது தாய் ஜானகி அருண்குமாரை கொலை செய்யுமாறு கூறினார். 
இதையடுத்து நாங்கள் 5 பேரும் சேர்ந்து அருண்குமாரை கொலை செய்தோம் என தெரிவித்து இருந்தார்.

கைது

இதை அறிந்து கொண்ட ஜானகி தலைமறைவாகி விட்டார். அவரை மந்தாரக்குப்பம் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.  இந்த நிலையில் ஜானகி சென்னையில் பதுங்கி இருப்பதாக மந்தாரக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜானகியை கைது செய்தனர். கைதான ஜானகி கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்