வடகீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்

வடகீரானூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-10-13 17:52 GMT

சங்கராபுரம்

3 வாக்குகள் வித்தியாசம்

சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வடகீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பஷீர், இதயத்துல்லா உள்பட மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது பஷீர், இதயத்துல்லா ஆகியோர் இடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் இதயத்துல்லா 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
இதை எதிர்த்து பஷீர் அன்று இரவு வாக்கும் எண்ணும் மையம் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மாலை பஷீர் தனது ஆதரவாளர்களுடன் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது வடகீரனூர் ஊராட்சி் மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் இதயத்துல்லா வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் கோஷம் எழுப்பினர். 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என கூறியதன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்