ஆரோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் வெட்டிக்கொலை 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆரோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரை வெட்டிக்கொலை செய்த 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-15 17:26 GMT
விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மணிவண்ணன் (வயது 55). இவர் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பட்டானூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தார்.

 நேற்று முன்தினம் மாலை ஆயுத பூஜையை முன்னிட்டு பட்டானூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மோட்டார் கொட்டகையில் படைப்பதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச்சென்றார். 

அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், பட்டானூர் திருநகர் பகுதியில் அவரை வழிமறித்து திடீரென தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மணிவண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் கை, பின்பக்க தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து அதே இடத்திலேயே இறந்தார்.

பழிக்கு பழிதீர்க்க

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, மணிவண்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மணிவண்ணனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட மணிவண்ணனின் மகன்களான சுந்தர், வினோத் ஆகியோரும் மற்றும் சிலரும் சேர்ந்து கடந்த 30.9.2020 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் என்பவரை கொலை செய்தனர். இதுதொடர்பாக புதுச்சேரி தன்வந்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், வினோத் ஆகியோரை கைது செய்த நிலையில் அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.

இந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் நோக்கில் சுந்தர், வினோத் ஆகிய இருவரையும் கொலை செய்ய மாந்தோப்பு சுந்தரின் தரப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக போடப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக சுந்தர், வினோத் ஆகிய இருவரும் ஊரில் இருந்து தலைமறைவாகி விட்டனர்.

 அவர்களை மாந்தோப்பு சுந்தரின் தரப்பினர் தேடி வந்துள்ளனர். இருப்பினும் அவர்களை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் முதல் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவர்களது தந்தையான மணிவண்ணனை கொலை செய்து விட்டால் அவரது இறப்புக்கு மகன்களான சுந்தர், வினோத் ஆகிய இருவரும் வரக்கூடும், அப்போது அவர்களை கொலை செய்து விடலாம் எனக்கருதி மணிவண்ணனை மாந்தோப்பு சுந்தரின் தரப்பினர் வழிமறித்து வெட்டிக்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

8 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து மணிவண்ணனின் மனைவி வள்ளி கொடுத்த புகாரின்பேரில் மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி (46), இவரது மகன் ஜோஷ்வா (20), மருமகன் மது (28) மற்றும் பாஸ்கர் (30), ஆனந்தராஜ் (27), சரண் (21), புத்தர் (42), முருகன் (42) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்