ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2021-10-16 05:38 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்தது
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் சென்றது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கியது. இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
பரிசல் இயக்க அனுமதி
இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்