காய்கறி வாங்குவது போல் நடித்து கடையில் பணம் திருட்டு; 4 பேர் கைது

ஆறுமுகநேரியில் காய்கறி வாங்குவது போல் நடித்து கடையில் பணம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-16 12:37 GMT
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் காய்கறி வாங்குவது போல் நடித்து கடையில் இருந்து பணத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காய்கறி கடை

ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சபரிலிங்கம். இவர் ஆறுமுகநேரி பஜாரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் இவரது கடைக்கு லட்சுமி மாநகரத்தை சேர்ந்த சிவராமன் உள்பட 4 பேர் வந்தனர். சிவராமனுடன் வந்தவர்கள் காய்கறி வாங்கியுள்ளனர். ஆனால் சிவராமனோ கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தவாறு இருந்துள்ளார். 
சிறிது நேரத்தில் சிவராமனும், அவரோடு வந்த 3 பேரும் காய்கறி வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.

பணத்தை காணவில்லை

பின்னர் சிறிது நேரத்தில் சபரிலிங்கம் தனது கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த ரூ.62 ஆயிரத்தை காணாமல் திகைத்து போனார். உடனே அவர் தன்னுடைய மாமனார் மற்றும் மைத்துனருடன் சேர்ந்து அவர்கள் 4 பேரையும் பஜாரில் தேடினார்.
அப்போது வடக்குத்தெரு பஸ் நிறுத்தம் அருகே 4 பேரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட சபரிலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த சபரிலிங்கம்,  சிவராமனை சோதனை செய்தபோது, அவரது இடுப்பு பகுதியில் அந்த பணம் பையோடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் பிடித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

4 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், சிவராமனுடன் வந்தவர்கள் கன்னிராஜபுரம் பாண்டி மகன் விஜய் ஆனந்த், திருச்செந்தூர் வீரராகவபுரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பாக்கிய விநாயகம், ஆறுமுகநேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சந்திரகுமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ் நாராயணன் வழக்குப்பதிவு செய்து, சிவராமன் உள்பட 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

மேலும் செய்திகள்