சாதி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி

சாதி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-16 20:57 GMT
பெங்களூரு:

 கலபுரகி விமான நிலையத்தில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சாதி அரசியலில்...

  சிந்தகி, ஹனகல் தொகுதியில் பிரபலம் வாய்ந்த வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தி உள்ளது. அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி. மக்கள் காங்கிரசுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். சிந்தகி தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். முஸ்லிம்கள் அறிவார்ந்தவர்கள். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.

  காங்கிரஸ் கட்சி என்றுமே சாதி அரசியலில் ஈடுபட்டதில்லை. நானும் சாதி அரசியலில் ஈடுபடவில்லை. எங்களுக்கு தெரிந்தது நீதி அரசியல் மட்டுமே. இடைத்தோ்தலில் காங்கிரசை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். மத்திய, மாநில பா.ஜனதா அரசுகளால் மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு சிந்தகி, ஹனகல் தொகுதி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மனகுலி மகனே சாட்சி

  காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் இல்லை, சிறுபான்மையினர் முன்னேற்றம் அடையவில்லை என்று சி.எம்.இப்ராஹிம் கூறி இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அதுபற்றி தகவல் தெரிந்ததும், பேசுவதே சரியாக இருக்கும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மனகுலி உயிர் இழக்கும் முன்பாக என்னை சந்தித்துபேசி இருந்தார். நான் பொய் சொல்வதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

  மனகுலி என்னை சந்தித்து காங்கிரசில் சேர இருப்பதாக கூறியது உண்மை. இதற்கு ஒரே சாட்சி, அவரது மகன் அசோக் மனகுலி தான். அப்படி இருக்கையில் குமாரசாமி சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்