இலவச மின்சாரம் கொண்டு வந்ததால் தி.மு.க.ஆட்சிக்கு விவசாயிகள் நன்றியுடன் உள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

இலவச மின்சாரம் கொண்டு வந்ததால் தி.மு.க.ஆட்சிக்கு விவசாயிகள் நன்றியுடன் உள்ளனர் என்று திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2021-10-17 17:18 GMT
திருவண்ணாமலை

இலவச மின்சாரம் கொண்டு வந்ததால் தி.மு.க.ஆட்சிக்கு விவசாயிகள் நன்றியுடன் உள்ளனர் என்று திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

முப்பெரும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை வேங்கிக்காலில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட சரவிளக்குகளுடன் கூடிய உயர் மின்கோபுர விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்புக்கான ஆணை மற்றும் மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்குதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 60 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பிற்கான ஆணை, 11 பேருக்கு மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-

இலவச மின்சாரம்

முதல்-அமைச்சராக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு 1989-ம் ஆண்டு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். மின்சாரம் இலவசமாக வழங்க கூடாது என்று ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு மின்சாரத்தை தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பின்னர் அதிகப்படியான விவசாயிகள் இலவச மின்சார திட்டத்தில் பயன்பெறும் மாவட்டம் திருவண்ணாமலை. எனவே விவசாயிகள் இந்த ஆட்சியின் மீது நன்றியுடன் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மின்இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஆண்டுக்கு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றார். 
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. நம் உயிரை காத்திட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

உயர் மின்கோபுரங்கள்

முன்னதாக அமைச்சர், சரவிளக்குகளுடன் கூடிய உயர் மின்கோபுர விளக்குகள் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதாப், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து, தி.மு.க. மாநில மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்