கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்

கடலூரில் பணம் கொடுக்க மறுத்த ஓய்வு பெற்ற துணை கலெக்டரை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-18 16:50 GMT
கடலூர், 

ஓய்வுபெற்ற துணை கலெக்டர் 

கடலூர் ஆனைக்குப்பம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). ஓய்வுபெற்ற துணை கலெக்டர். இவருடைய மனைவி சரஸ்வதி. ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரி. இவர்களுக்கு ஆனந்தசெந்தில், கார்த்திக், கணேஷ் ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 
இதில் கார்த்திக், கணேஷ் இரட்டை சகோதரர்கள். சுப்பிரமணியன் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர்களது மகள் அமெரிக்காவிலும், ஆனந்தசெந்தில் பெங்களூருவிலும், கணேஷ் சென்னையிலும் வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன், கார்த்திக் (32) ஆகிய 2 பேர் மட்டும் மீனாட்சிநகரில் வசித்து வந்தனர். கார்த்திக் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. முடித்துள்ளார். திருமணமாகவில்லை. 

அடித்துக் கொலை

இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணியனுக்கும், கார்த்திக்குக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது தந்தை சுப்பிரமணியனை இரும்பு குழாயால் அடித்துக் கொலை செய்தார்.இது பற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காலி மதுபாட்டில்கள்

பின்னர் அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்பிரமணியன் உடலை பார்த்தனர். அவரது கை, கால், உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். அவரது அறையையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. காலி சிகரெட் அட்டைகளும் குவியல், குவியலாக கிடந்தன.

மகன் கைது 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திக் மதுவுக்கு அடிமையானதும், தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தந்தை சுப்பிரமணியனிடம் தகராறு செய்து வந்ததும், நேற்று பணம் கொடுக்க மறுத்ததால், தந்தை என்றும் பாராமல் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்