கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-10-18 20:10 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள மேலஅகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், தேன் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கைலாய வாத்தியம் முழங்க பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்து நந்தி பகவானை வழிபட்டனர்.
இதேபோல் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. அப்போது திருமுறை புத்தகங்கள் வைக்கப்பட்ட பேழை பிரகார திருச்சுற்றில் எடுத்து வரப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள கழுகுமலைநாதர் கோவிலில் பெரியநாயகி அம்பாள், கழுகுமலை நாதர், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்