ஐப்பசி பவுர்ணமி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-10-20 16:08 GMT
திருவாரூர்:-

ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஐப்பசி பவுர்ணமி

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெறுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வ ஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லா வளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் புதுத்தெரு கர்ணேஸ்வரர் கோவிலில் கர்ணேஸ்வரருக்கு அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் கந்த சாய்பாபா கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கமான ஜோதி சொர்ண லிங்கேஸ்வரருக்கு குருசாமி கனகசபாபதி தலைமையில் அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
விளமல் பதஞ்சலி மனோகர் கோவில், கீழவீதி துர்வாசகர் கோவில், நொடிநைனார் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அன்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை- குடவாசல்

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதேபோல் மகா மாரியம்மன் கோவிலில் மகா மாரியம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
குடவாசல் கோணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குடவாசல் சத்ரு சம்ஹாரமூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில், சர்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி எமனேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் திருக்குளத்தை சுற்றி தீபம் ஏற்றி கிரிவலம் வந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதேபோல் ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஆபத்சகாயேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்