ஆரணி அருகே தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் பெட்ரோல் ஊற்றி எரிப்பு. லாரி டிரைவா் கைது

ஆரணி அருகே மோட்டார்சைக்கிளை எடுத்து ஓட்டியதால் ஏற்பட்ட தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற லாரி டிரைவரை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2021-10-21 16:14 GMT
ஆரணி

ஆரணி அருகே மோட்டார்சைக்கிளை எடுத்து ஓட்டியதால் ஏற்பட்ட தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற லாரி டிரைவரை போலீசாா் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வீடு பாகப்பிரிவினையில் முன்விரோதம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விளை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளை என்பவரின் மகன்கள் புருஷோத்தமன் (வயது 38), ராஜசேகர் (34). இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நெசவுத்தொழிலாளியான புருஷோத்தமனுக்கும், இவரின் மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். லாரி டிரைவரான ராஜசேகர் தனது மனைவி ஜீவரேகா, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

வீடு பாகப்பிரிவினை செய்வதில் அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்தசில நாட்களுக்கு முன்பு ராஜசேகரின் மோட்டார்சைக்கிளை புருஷோத்தமன் எடுத்துச் சென்று ஓட்டி விட்டு 2 நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் தன்னுடைய மோட்டார்சைக்கிளை புருேஷாத்தமன் திருடி சென்று விட்டதாக, அக்கம் பக்கத்தில் கூறி வந்தார். 

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

இதை கேள்விப்பட்ட புருஷோத்தமன் ராஜசேகரை பார்த்து, எனக்கு ஏன் திருட்டு பட்டம் கொடுத்தாய்? எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று இருவருமே வீட்டில் தூங்க சென்று விட்டனர். அதில் மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர், புருஷோத்தமன் தூங்கியபோது பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். எரியும் தீயுடன் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த புருஷோத்தமன் வாசலில் தடுமாறி விழுந்தார். 

அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து, சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புருஷோத்தமனுக்கு 75 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

சிறையில் அடைப்பு

உடன் பிறந்த அண்ணனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற தம்பி ராஜசேகரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்