ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய இளம்பெண்; வாலிபர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-21 18:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
முகத்தில் வீச முயற்சி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன்நகரை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோடு் நகைக்கடை பஜாரில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து வாலிபர் ஒருவர் தகராறு செய்தார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் வீச முயன்றார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக சுதாரித்து கொண்டு வாலிபரின் கையை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் ஆசிட் வாலிபரின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்து விட்டது. இதன்காரணமாக அதிர்ஷ்டவசமாக ஆசிட் வீச்சில் இருந்து அந்த பெண் தப்பினார். இதற்கிடையே, ஆசிட் வீச முயன்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
கைது
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிட் வீசியவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருவை சேர்ந்த பிரபு(34) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், இளம்பெண் மீது எதற்காக ஆசிட் வீச முயன்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வேலைக்கு சென்ற பெண் மீது ஆசிட் வீச முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்