ரூ.14¾ லட்சம் குட்கா பறிமுதல்

ரூ.14¾ லட்சம் குட்கா பறிமுதல்

Update: 2021-10-21 20:04 GMT
ஓமலூர், அக்.22-
ஓமலூர் அருகே பெங்களூருவில் இருந்து கோவைக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.14¾ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா கடத்தல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா மேற்பார்வையில் நெடுஞ்சாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் நேற்று காலை 8 மணி அளவில் ஓமலூர் அருகே காமலாபுரம் பிரிவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். உடனே லாரியில் இருந்த டிரைவர் தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அப்போது அதில் 40 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,175 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல்
மேலும் மினி லாரியில் வந்த மற்றொரு நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தப்பி ஓடிய டிரைவர் மேச்சேரி உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், பிடிபட்டவர் சிவன் நாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிளீனர் கார்த்திக் என்பதும் தெரியவந்தது. 
பின்னர் பிடிபட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றையும், மினி லாரியும் ஓமலூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மினி லாரி கிளீனர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்