திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ.762 கோடி ஒதுக்கீடு

திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ.762 கோடி ஒதுக்கீடு

Update: 2021-10-21 20:06 GMT
சேலம், அக்.22-
தமிழகத்தில் திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ.762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சேலத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
ஆய்வு
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று மாலை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் கோர்ட்டு வளாகத்தில் அமைந்துள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு சென்ற அமைச்சர் கீதாஜீவன், அங்கு இருந்த இளம்பெண்களின் குறைகளை கேட்டார்.
இதையடுத்து அய்யந்திருமாளிகையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், சின்னதிருப்பதி பிந்தா பெண் குழந்தைகள் இல்லம் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.
வசதிகள்
மேலும், குழந்தைகள் இல்லத்தில் உள்ள சமையலறையில் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டு இருந்த உணவு மற்றும் சுண்டலை சாப்பிட்டு தரமாக உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். 
மேலும் விடுதியில் உள்ள கழிவறை மற்றும் குழந்தைகள் உறங்கும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர், குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா? என்பது குறித்து பார்வையிட்டார்.
அமைச்சர் பேட்டி
இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதைதடுக்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், பயிற்சி கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அதாவது மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்களை கிராம அளவில் குழுக்கள் அமைத்து குழந்தை திருமணங்கள் நடப்பதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.762 கோடி நிதி
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரையில் 46 திருமணங்கள் நடத்தப்படாமல் திருமணங்கள் நடந்தது போல திருமண பத்திரிகைகள் தயாரித்து நிதி உதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவற்றை கண்டறியப்பட்டு திருமண நிதி உதவிகள் ஏதும் வழங்கப்படாமல் தடுக்கப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வீடுகளை புகைப்படம் எடுக்கவும், திருமணம் நடைபெறும் நாளில் புகைப்படம் எடுத்து உறுதிப்படுத்தும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கியுள்ளோம்.
தமிழகம் முழுவதும் திருமண உதவி வேண்டி சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அவற்றை உரிய முறையில் ஆவணங்களை சரிபார்த்து நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.762 கோடி நிதிஉதவி ஒதுக்கியுள்ளது.
தத்தெடுப்பு மையங்கள்
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 21 குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் உள்ளன. இதில், காரா என்ற மத்திய அரசின் சட்டத்தின்படி முறைப்படி குழந்தைகள் தத்து வழங்கப்படுகிறது. மேலும், இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இதுபோன்ற தவறுகள் ஏதும் நடப்பதில்லை. குழந்தைகள் தத்து கொடுக்கும் நிகழ்வுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
ஆய்வின்போது, சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதி, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்