ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் வெற்றி. மற்றொரு தரப்பினர் மறியல், தீக்குளிக்க முயற்சி

ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றார். இதனால் மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-22 17:15 GMT
வாணியம்பாடி

ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றார். இதனால் மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் தடியடி

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 11 பேரும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரும், பா.ம.க. வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெற்றனர்.

வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடந்த 20-ந் தேதி ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு முடிந்ததும் வெளியே வந்தபோது தலைவர்பதவியை பிடிக்க தி.மு.க. வினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து கவுன்சிலர்களை கடத்துவதற்காக காரில் ஏற்ற முயன்றனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

தலைவர் தேர்தல்

இந்த நிலையில் நேற்று ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர், துணைதலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடைபெற்றது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜி தலைமையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் நடந்த பகுதிக்கு 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் மட்டும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். அந்தப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

அ.தி.மு.க. ஆதரவுடன் தி.மு.க. வெற்றி

காலை 10 மணிக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது தி.மு.க.வை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் வெளியில் சென்று விட்டனர். தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், பா.ம.க. கவுன்சிலர்கள் 2 பேர் ஆதரவுடன் தி.மு.க.வை சேர்ந்த சங்கீதா பாரி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த 6 தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தி.மு.க. வேட்பாளரான காயத்திரி பிரபாகரனுக்கு துரோகம் செய்து, அ.தி.மு.க.வுடன் கை கோர்த்த தி.மு.க.வினரை கண்டித்தும், மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி

அப்போது மறியலில் ஈடுபட்டிருந்த ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தீ குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்டனர். 

மேலும் செய்திகள்