கொத்தப்பல்லி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தகராறு; தர்ணா போராட்டம்

கொத்தப்பல்லி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தகராறு ஏற்பட்டு ஒரு தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

Update: 2021-10-22 17:28 GMT
பேரணாம்பட்டு

கொத்தப்பல்லி ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தகராறு ஏற்பட்டு ஒரு தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு

பேரணாம்பட்டு ஒன்றியம் கொத்தப்பல்லி ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. உதவி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தேர்தலை நடத்தினார். துணைத் தலைவர் பதவிக்கு புனிதா, அருண் ஆகிய இரண்டு பேர் போட்டியிட்டனர்.

புனிதாவுக்கு, தலைவர் ரோஜா மற்றும் 3 வார்டு உறுப்பினர்களும், அருணுக்கு 3 பேரும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்தனர். குரல் வாக்கெடுப்புக்கு அருண் எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சீட்டு முறை தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார்.

தர்ணா போராட்டம்

இதனையடுத்து முறையாக ஓட்டெடுப்பு மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அருணுக்கு 4 ஓட்டுகளும், புனிதாவுக்கு 3 ஓட்டுகளும் கிடைத்ததாக புறப்படுகிறது. தேர்தல் அலுவலர் சிவகுமார் வாக்குச் சீட்டை அருணுக்கு ஆதரவாக மாற்றி வைத்துள்ளார் என க்கூறி அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா உள்பட 3 கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பினரும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜெரோம் ஆனந்தனிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது அருண் தான் வெற்றி பெற்றதாகவும்,  தன்னுடைய வெற்றியை செல்லாது என கூறுவது தவறு எனக்கூறி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தனது ஆதரவாளர்களுடன் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக தரையில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

முடிவு நிறுத்தி வைப்பு

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருணிடம் பேரணாம்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் கொத்தப்பல்லி ஊராட்சி மன்ற துணை தலைவர் யார் என்கிற முடிவு அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்