கழனிப்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தேர்தலில் மோதல். ஊனை ஊராட்சியில் தேர்தல் தள்ளிவைப்பு

ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தேர்தலில் மோதல்

Update: 2021-10-22 17:54 GMT
அணைக்கட்டு
 
அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கழனிப்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில், போட்டியிட்ட சரவணன், அமுலு ஆகியோர் தலா 5 ஓட்டுகள் பெற்றனர். 

இதனையடுத்து துணைத்தலைவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் துணைத்தலைவர் தேர்தலை தள்ளி வைக்கும்படி கோஷங்கள் எழுப்பி தலைவரை தாக்க முயற்சி செய்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சிங்காரம், நந்தகோபால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்படனர். 
பின்னர் தலைவர் ரீனாகுமாரி, அமுலுக்கு வாக்களித்ததை வாபஸ் பெற்றதால் 5 ஓட்டுகள் பெற்ற சரவணன் துணைத்தலைவராக தேர்வு பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

தலைவர்  ரீனாகுமாரி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக, சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறாக பேசியதால் தலைவர் கதறி அழுதார். அவரை போலீசார் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து  சென்றனர்.

ஊனை ஊராட்சியில் ஏற்கனவே தோற்ற வேட்பாளரை வெற்றி பெற செய்ததாக தேர்தல் அதிகாரி மீது  ஆத்திரத்தில் இருந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர் நேற்று நடந்த துணைத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்