ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு. எதிர்ப்பு தெரிவித்து 4 உறுப்பினர்கள் தர்ணா

ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு

Update: 2021-10-22 18:17 GMT
காட்பாடி

வண்டறந்தாங்கல் ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டு உறுப்பினர்கள் 4 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குலுக்கல் முறையில் தேர்வு

காட்பாடி ஒன்றியம் வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவராரக எஸ்.பி.ராகேஷ் வெற்றி பெற்றுள்ளார். 9 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். துணை தலைவர் பதவிக்கு முத்துலட்சுமி மற்றும் பிரசில்லா ஆகியோர் போட்டியிட்டனர். தலைவர் உள்பட 10 பேரும் ஓட்டு போட்டனர். இதில் இருவரும் தலா 5 வாக்குகளைப் பெற்றனர்.

இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவரை தேர்வு செய்வது என அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு 2 வேட்பாளர்களும் ஒப்புதல் கடிதம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குகன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் சீட்டு எழுதி போட்டனர். அதனை ஊராட்சி மன்றத் தலைவர் ராகேஷ் எடுத்தார். அதில் முத்துலட்சுமி பெயர் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
 
தர்ணா போராட்டம்

இதனால் பிரசில்லா அழுதுகொண்டே வெளியே வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தலைவரும் வாக்களித்ததால் அவர் குலுக்கல் சீட்டு எடுத்திருக்கக் கூடாது. 3-வது ஒரு நபரை வைத்து சீட்டை எடுத்திருக்க வேண்டும் என பிரசில்லாவுக்கு வாக்களித்த வார்டு உறுப்பினர்கள் கூறி வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, அல்போன்சா, சூர்யா, அன்பு ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் மற்றும் அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டனர். 

மாலை 3.20 மணி வரை காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வராததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்