அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும்

அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும்

Update: 2021-10-22 20:54 GMT
சேலம், அக்.23-
வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும், பருவமழை காலங்களில் போதிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து உள்ளார். குறிப்பாக, வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களை முன்னதாகவே கண்டறிந்து அந்த இடங்களுக்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நோய் தடுப்பு மருந்துகள்
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவில் நோய்தடுப்பு மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மருந்து தெளிக்க வேண்டும்.
மேலும், தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் தடையின்றி போக்குவரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
பள்ளி கட்டிடங்களில் உள்ள பழுதுகளை சரி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் நீர் இருப்பு விவரம் குறித்த நிலவரங்களை தினமும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.121-ல் செயல்பட்டு வரும் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளப்பட்டி ஏரி
இதைத்தொடர்ந்து, சேலம் பள்ளப்பட்டி ஏரிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி தூர்வாரும் பணி குறித்து விவரம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து சேலம் ஆனந்தா பாலம் அருகில் திருமணிமுத்தாறு மழை நீர் வடிகால் அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்