ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு

ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு தொடர்பாக சகோதரர், உறவினரிடம் டி.ஐ.ஜி. மகேஸ்வரி நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2021-10-22 21:03 GMT
ஆத்தூர்,

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி அங்கு இரவு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டில் நுழைந்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்திரகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து அப்போதைய ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பாபு  விபத்து வழக்கு என பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோவை மண்டல ஐ.ஜி. சுதாகரன், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவர் ஆத்தூர் அருகே உள்ள சக்தி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று விபத்தில் இறந்த கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் ரமேஷ் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதையொட்டி ரமேஷ் குடும்பத்தினர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கு குறித்து டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை முடிவில் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது திட்டமிட்டு கொலை செய்தார்களா? என்பது தெரியவரும் என்றனர்.

மேலும் செய்திகள்