விபத்தில் தொழிலாளி பலி; உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்

உடையார்பாளையம் அருகே விபத்தில் இறந்த தொழிலாளியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-23 21:36 GMT
உடையார்பாளையம்:

தொழிலாளி சாவு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு(வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவரது மகளை இடையார் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் மகள் வீட்டிற்கு சென்ற அவர், பேரன் ரஞ்சித்தை(9) அழைத்துக்கொண்டு ேநற்று மதியம் ஸ்கூட்டரில் உடையார்பாளையம் புறவழிச்சாலை ஓரமாக வந்தார்.
தத்தனூர் மேலூர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை மறியல்
இந்நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் தங்கராசுவின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு ராஜன் மற்றும் உடையார்பாளையம் போலீசார், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த சாலையில் அணுகு சாலை அமைக்க வேண்டும். பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும், விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதற்கு, துறை ரீதியான அலுவலர்களை தொடர்பு கொண்டு அப்பகுதியில் அணுகு சாலை மற்றும் பஸ் நிறுத்தம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து தங்கராசுவின் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது‌.

மேலும் செய்திகள்