கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-23 22:16 GMT
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி சுமித்ரா (வயது 32). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த தனது கள்ளக்காதலன் சுந்தர் (35) என்பவருடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ரா, சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். 

இந்த நிலையில் நாங்குநேரியில் தனது தாயுடன் உள்ள குழந்தைகளை பார்ப்பதற்காக சுமித்ரா நேற்று முன்தினம் வந்தார். இதை அறிந்த அவரது தம்பி பெயிண்டரான ெசல்வராஜ் (25) என்பவர் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய காரணத்தால் சுமித்ரா இங்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். 

நேற்று காலையில் வீட்டின் முன்பு சுமித்ரா நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சுமித்ராவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட செல்வராஜ் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சுமித்ராவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டர். 
இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகிறார்கள்.  

கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண்ணை அவரது தம்பியே சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்