கனமழை இடர்பாடுகளை எதிர்கொள்ள தயார்நிலை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார்நிலையில் உள்ளதாக ராமநாதபுரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-24 17:40 GMT
ராமநாதபுரம், 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார்நிலையில் உள்ளதாக ராமநாதபுரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை 
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
கொரோனா பரவல் 2-ம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் அதனை போர்க்கால அடிப்படையில் எதிர்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கையாண்டதோடு, பொதுமக்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.
தயார் நிலையில்
அந்தவகையில் அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள ஏதுவாக மேற் கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து கண்காணிப்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். 
அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் கண்காணிப்பு அமைச்சராக பணி செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. கலைஞர் கருணாநிதி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்.மக்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்.
கூடுதல் கவனம்
குடிநீர் வசதி, சாலை வசதி, பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.இந்த கூட்டத்தில் கலெக்டர் சங்கர்லால் குமாவத்,  நவாஸ்கனிஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ராம.கருமாணிக்கம் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட ஊராட்சிதலைவர் திசைவீரன், துணைத் தலைவர் வேலுச்சாமி மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்