திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-25 17:52 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டா திருத்தம் குறித்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாமை வருகிற பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்துக்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 

அப்போது விவசாயிகள் கொரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறை, தலைக்கு துணிக் கவசம் போன்றவற்றை அணிந்தபடி கையில் கிருமி நாசினியுடன் வந்து உடற்பயிற்சி செய்வது போல் கைகளை மேலும் கீழும் உயர்த்தி காண்பித்தும், கைகளைத் தட்டி காண்பித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பட்டா திருத்தம் முகாம் டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் நடத்தி மனுக்கள் பெற்று ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த சிறப்பு முகாம்களை வருகிற பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும், செப்டம்பர் மாதம் 24-ந்தேதி பட்டா திருத்தம் குறித்து பெற்ற மனுக்கள் நிலை என்ன என்பதை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்