தொழில் முனைவோருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தொழில் முனைவோருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-10-26 09:02 GMT
செங்கல்பட்டு,

உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக புத்தாக்க திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய 3 வட்டாரங்களில் உள்ள 119 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கதிட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களில் உள்ள பயனாளிகளுக்கான சேவையை அளிக்கும் பொருட்டு ஓரிட வசதி மையம் தொடங்கப்பட உள்ளது.

இந்த மையத்தின் வாயிலாக ஊரகப்பகுதிகளில் அனைத்து வகையான புதிய மற்றும் மேம்படுத்தப்பட உள்ள தொழில்களுக்கு தேவையான தொழில் திட்டம் தயார் செய்தல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல், தொழில் முனைவு பயிற்சி போன்ற பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பொருட்டு இந்த மையத்தில் பணியாற்றிட தொழில் வளர்ச்சியில் அனுபவமுள்ள முதுகலை பட்டம் பெற்ற 40 வயதுக்குட்பட்ட மற்றும் கம்ப்யூட்டர் இயக்குவதில் அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து ஒரு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் மற்றும் ஒரு தொழில் முனைவு நிதி அலுவலர் என 2 பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்களை www.tnrtp.org என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இணைய தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட அலுவலகத்தில் 15.11.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்பித்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம், பழைய எண் 37, புதிய எண் 26, அழகேசன் நகர், (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் அருகில்) செங்கல்பட்டு - 603001 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட திட்ட அலுவலத்தில் நேரடியாகவோ அல்லது 044-27432018 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்