கனிமவளத்துறை அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா

கனிமவளத்துறை அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-26 20:09 GMT
பெரம்பலூர்:

கிராவல் மண் எடுக்க தடை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களில், வண்டல் மண் மற்றும் கிராவல் மண் ஆகியவை கட்டிடம் மற்றும் சாலை ஆகியவற்றின் பணிகளுக்கு பயன்படுத்த எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கிராவல் மண் எடுப்பதற்கு கனிமவளத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து லாரிகளில் கிராவல் மண் அள்ளிச்சென்று தொழில் நடத்தும் டிப்பர் லாரி உரிமையாளர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரை சந்தித்து கடந்த மாதம் மனு அளித்தனர். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா கிராவல் மண் எடுப்பதற்காக கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் பரிந்துரை செய்தார்.
முற்றுகை
ஆனால் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஏரி, குளங்களில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி நேற்று கனிமவளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரிடம் முறையாக அனுமதி கடிதம் பெற்றபிறகு தெரிவிப்பதாக கூறியதையடுத்து, டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்