தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-26 21:26 GMT
குளத்தை தூர்வார வேண்டும்
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து பரம்புக்கரை செல்லும் சாலையில் நெடுங்குளம் உள்ளது. வேர்கிளம்பி பஞ்சாயத்துக்கு உள்பட்ட இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், முறையாக பராமரிக்காததால் செடி கொடிகள் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -சுனில்ராஜேஷ், முதலார்.
சுகாதார சீர்கேடு
பள்ளத்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சங்குதுறை கடற்கரை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து சங்குத்துறை செல்லும் சாலையோரம் சிலர் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள், சுற்றுலா வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி அதை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 -மகேந்திரன், மேலகிருஷ்ணன்புதூர். 
ஓடை தூர்வாரப்படுமா?
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகில் பெதஸ்தா காம்பிளஸ் தெரு உள்ளது. இந்த தெருவின் முடிவில் வேதானந்தாதெரு-பைப்புவிளை செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால், கழிவுநீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?       
-விக்டர், வேதானந்தாதெரு.
வீணாகும் குடிநீர்
வில்லுக்குறியில் இருந்து பேயன்குழி செல்லும் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் மணக்கரை புதுக்கிராமம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் எதிரே பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. ஆனால், முறையாக சீரமைக்காததால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாகிறது. இதனால், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இரவு நேரம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், குதிரைபன்றிவிளை.
நடைபாதையை சீரமைக்க வேண்டும்
ஆளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலபெருவிளை ஆர்.சி. ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள பாரதி தெருவில் சுமார் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்கள் செல்வதற்காக பாசன கால்வாய் மீது இருபுறமும் சுவர் அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாதையில் சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. அருகில் உள்ள காம்பவுண்டு சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்வேர் பள்ளத்தில் சிக்கி கால்வாய்க்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள், குழந்தைகள் நலன் கருதி பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.அருள் சபிதா ரெக்ஸலின், மேலபெருவிளை.
செடிகள் அகற்றப்பட்டது
கீழ்குளம் வில்லாரிவிளையில் இருந்து பொத்தியான்விளை செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி வெளியான அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்