மாநகராட்சி, போலீசார் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் முக கவசம் அணியாத 5 ஆயிரத்து 40 பேர் மீது வழக்கு

மாநகராட்சி, போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றன. சென்னையில் முக கவசம் அணியாத 5 ஆயிரத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-10-27 04:29 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்காக தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட வணிகதள பகுதிகளில் குவிந்து வருகின்றனர். பண்டிகை கால உற்சாகத்தில் கொரோனா பரவலை பலர் மறந்துவிடுகின்றனர்.

எனவே 3-வது அலை ஏற்படாத வகையில் மாநகராட்சியும், போலீஸ் துறையும் இணைந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 5 ஆயிரத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.10 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் கடை வீதிகள், மார்க்கெட் பகுதிகள், பஸ், ரெயில் நிலையங்களில் முக கவச சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வெளிவரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்