எம்-சாண்ட் மணல் லாரியில் கடத்தல்

தேனியில் இருந்து கேரளாவுக்கு எம் சாண்ட் மணலை லாரியில் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-27 11:43 GMT
கம்பம்:

உத்தமபாளையம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது, மேல்பகுதியில் மட்டும் பரவலாக ஜல்லிக்கற்களை வைத்து விட்டு, அடியில் எம்-சாண்ட் மணல் மறைத்து வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி கோவிந்தன் கோவில் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 32) என்று தெரியவந்தது.

 மேலும் அவரிடம் இருந்த கனிம வளத்துறையினர் வழங்கிய அனுமதி சீட்டை பார்த்தனர். அதில் ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 

எனவே ஜல்லிக்கற்கள் என்ற பெயரில் அனுமதிபெற்று, எம்-சாண்ட் மணலை துரைப்பாண்டி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். 

லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. ேமலும் இந்த வழக்கில் தொடர்புடைய எர்ணாகுளத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பிஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்