5,997 பேருக்கு ரூ.315¾ கோடி கடனுதவி

5,997 பேருக்கு ரூ.315 கோடி கடனுதவி

Update: 2021-10-27 16:07 GMT
திருப்பூர், 
திருப்பூரில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் 5,997 பேருக்கு ரூ.315¾ கோடி கடனுதவியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம்
திருப்பூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமை நேற்று திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மகாலில் நடத்தியது. முகாமுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 361 வணிக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட கடன் குறியீட்டுக்கு மேல் கடனுதவி வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியது. 2022-23-ம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்து 169 கோடி கடன் வழஙக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மக்களுக்கு விவசாய கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன், கல்விக்கடன், வீட்டுவசதிக்கடன், வாகன வசதிக்கடன், தனிப்பட்ட நுகர்வோர் கடன் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வங்கி தொடர்பான விவரங்கள் வழங்கப்படுகிறது.
5,997 பேருக்கு கடனுதவி
முகாமில் 5 ஆயிரத்து 997 பேருக்கு ரூ.315 கோடியே 83 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விளக்கங்களை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பல்வேறு வங்கிகள் சார்பில் 5,997 பேருக்கு ரூ.315 கோடியே 83 லட்சத்தில் வங்கி கடனுதவியை வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
முகாமில் கனரா வங்கி பொதுமேலாளர் ஸ்ரீகன்ட மோக பத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், யூகோ வங்கி மெயின் கிளை முதன்மை மேலாளர் அஸ்வின், முதுநிலை மேலாளர் கவுதமன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்