மாணவி மீது சாக்பீஸ் எறிந்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல்; கிராம மக்கள் சாலை மறியல்

மாணவி மீது சாக்பீஸ் எறிந்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-29 20:55 GMT
குன்னம்:

தாக்குதல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் நேற்று முன்தினம் பள்ளி சென்றுவிட்டு, மாலையில் அரசு டவுன் பஸ்சில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த பிளஸ்-1 மாணவி மீது வேறு ஊரை சேர்ந்த மாணவர் சாக்பீசை எறிந்துள்ளார். இதையடுத்து அந்த மாணவரை, அதே பஸ்சில் பயணம் செய்த அந்த மாணவியின் தம்பி, அவரது நண்பர் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
அப்போது அவர்களை சாக்பீஸ் எறிந்த மாணவர் ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் போன் செய்து அவரது ஊரை சேர்ந்தவர்களை அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து 16 வயது மதிக்கத்தக்க 4 சிறுவர்களும், அடையாளம் தெரியாத சிலரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர்.
சாலை மறியல்
அவர்கள் மாணவியின் தம்பி உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பிளஸ்-2 மாணவரின் அண்ணனான 18 வயது கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் அங்கு வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டனர். அப்போது கல்லூரி மாணவருக்கும், அவரது நண்பருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் இரவு அந்த மாணவியின் கிராமத்தைச் சேர்ந்த 30 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த ஊரின் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கு
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவர் கொடுத்த புகாரின்பேரில் சாக்பீஸ் எறிந்த மாணவர் மற்றும் 4 சிறுவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவி மீது சாக்பீஸ் எறிந்த மாணவர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்