தஞ்சையில் 108 பள்ளி வாகனங்கள் ஆய்வு

தஞ்சையில் 108 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் முறையாக பராமரிக்காத 12 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.

Update: 2021-10-30 21:49 GMT
தஞ்சாவூர்;
தஞ்சையில் 108 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் முறையாக பராமரிக்காத 12 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
கொரோனா தொற்று குறைந்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று மேலும் குறைந்தநிலையில் தற்போது இயல்பு நிலை முன்புபோல் திரும்பி உள்ளது.
இதனால் நாளை (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் அவர்கள் பயணம் செய்யக்கூடிய பள்ளி வாகனங்கள்உச்சநீதிமன்ற நெறி முறைகளை கடைபிடித்து செயல்படுகிறதா? என தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர்
இதற்காக பள்ளி வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 57 பள்ளிகளை சேர்ந்த 325 வாகனங்களை ஆய்வுக்காக கொண்டு வரும்படி பள்ளி நிர்வாகனத்தினரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. நேற்று 108 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பள்ளி வாகனங்களில் ஏறி அவசரகால வழி சரியான முறையில் இருக்கிறதா? முதலுதவிப் பெட்டி உள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பள்ளி வாகனங்களுக்கான அனுமதி சீட்டு, தகுதிச்சான்று, காப்பு சான்று, புகை சான்று, வரி சான்று, வேக கட்டுப்பாட்டு கருவி பயன்பாடு நிலை, ஜி.பி.எஸ். கருவி பயன்பாடு, அவசர வழி, தீயணைப்பு கருவி, முதலுதவிப் பெட்டியில் மருந்துகள் இருப்பு நிலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறி முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்கு உட்படாத வாகனங்கள் கண்டிப்பாக இயக்க அனுமதிக்கப்படாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கட்டாயப்படுத்த மாட்டோம். விருப்பத்தின் பெயரிலே வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிராகரிப்பு
தொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 12 வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், உரிய சான்று இல்லாமலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12 வாகனங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் திலகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் 44 பள்ளிகளை சேர்ந்த 238 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்