வங்கியில் வேலை வாங்கித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி; வாலிபர் கைது

வங்கியில் வேலை வாங்கித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி; வாலிபர் கைது.

Update: 2021-11-04 17:57 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சிமெண்ட் சாலையை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 60). இவர் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள வங்கிக்கு ஆள் தேவை என்பதை விளம்பரம் மூலமாக அறிந்து அங்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கு இருந்த சூளையை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவரிடம் தனது மகளுக்கு வேலை பெற்று தருவதற்காக 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ், ஜெயசீலன் மகளுக்கு கடந்த 9 மாதமாக எந்த வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் போலி பணி நியமன ஆணை அளித்து மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில், திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதே போல், சென்னை ஆவடி, மேற்கு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 54), என்பவர் தென்னக ரெயில்வேயில் வேலை செய்து வரும் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கிழக்கு பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (46) என்பவரிடம் தனது மகள் மற்றும் உறவுக்கார பெண் ஒருவர் என 2 பேருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கித் தர 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்த வெங்கடேசன் மீது சுரேஷ்குமார் அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்