திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2021-11-04 22:16 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குபேரன், அஞ்சலாட்சி, கலையரசி, போளிவாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள யுவராஜ் என்பவர் கடந்த மாதம் 20-ந் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த போது அங்கு வந்த நபர்கள் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இது குறித்து அவரது மனைவி மப்பேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய வழக்கில் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகளான கொட்டையூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான சதாசிவம் என்பவரை கைது செய்யாமல் விடுவித்தனர்.

புகார் மனு

எனவே இந்த வழக்கில் கொட்டையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவத்தை கைது செய்தும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்