ஓசூர் அருகே மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஓசூர் அருகே மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-11-10 04:47 GMT
ஓசூர்:
ஓசூர் அருகே மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமி உயிர் இழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி வெங்கடலட்சுமி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. மதுமித்ரா (9) என்ற மகளும், சுதீப் (4) என்ற மகனும் உள்ளனர். இதில் மதுமித்ரா அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த வெங்கடலட்சுமி கடந்த 7-ந் தேதி இரவு கறிக்குழம்பில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி மதுமித்ரா உயிர் இழந்தாள்.
2 பிரிவுகளில் வழக்கு
வெங்கடலட்சுமி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் சுதீப்பை விஷம் கலந்த உணவை சாப்பிட வெங்கடலட்சுமி அழைத்த போது அவன் சாப்பாடு வேண்டாம் என கூறி பக்கத்து வீட்டிற்கு சென்றதால் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
இறந்த மகளின்  உடலை பார்த்து  கிருஷ்ணப்பா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வெங்கடலட்சுமி மீது கொலை வழக்கு (பிரிவு 302) மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்தல் (பிரிவு 309) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்