கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-11-10 16:50 GMT
கள்ளக்குறிச்சி

தாய்-சேய் நலப்பிரிவு

கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு பின்பகுதியில் உள்ள தாய்-சேய் நல சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அந்த சிகிச்சை பிரிவில் திடீரென வெடி வெடிப்பது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கிருந்த கர்ப்பிணிகளும், கைக்குழந்தையுடன் இருந்த பெண்களும், அவர்களுடன் தங்கியிருந்த உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து புறக்காவல் நிலைய போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவம் நடந்த தாய்-சேய் நல சிகிச்சை பிரிவை பார்வையிட்டனர். அப்போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்காக சுவரில் பதிக்கப்பட்டு இருந்த ஆக்சிஜன் குழாய் வெடித்தது தெரியவந்தது. இதில் நோயாளிகள் யாருக்கும் பாதிப்பு இ்ல்லை. 
ஆக்சிஜன் குழாய் வெடித்ததற்கான காரணம், உடனடியாக தெரியவில்லை? இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

இதற்கிடையே உடைந்த குழாயை அதிகாரிகள் சரிசெய்த பின்னர், நோயாளிகள் மீண்டும் வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் குழாய் வெடித்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்