பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் மழையின் காரணமாக அதிகளவு மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் யாரும் சுரங்கப்பாதைகளின் வழியே செல்ல வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-11-12 09:16 GMT
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுரங்கப்பாதைகளில் மழைநீர்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் தற்போது வரை சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது மழைநீர் தேக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் மண்டலம் வார்டு 5-ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை, ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராயநகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் மழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு சீர்செய்யப்பட்டு வருகிறது. பருவ மழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

பொதுமக்கள் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819, 9445025820, 9445025821 ஆகிய வாட்ஸ்-அப் எண்களிலும் தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற புகார்கள் குறித்தும், தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்