மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-13 19:22 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விவசாயி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை தேவர் சிலை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மின் மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது ஆறுமுகசாமி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஊத்துமலை போலீசார் விரைந்து சென்று, இறந்த ஆறுமுகசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சாலை மறியல்

இதற்கிடையே தொடர் மழையால் ஏற்பட்ட மின்கசிவில் மின்சாரம் பாய்ந்து இறந்த ஆறுமுகசாமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஊத்துமலை போலீஸ் நிலையம் முன்பாக உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ., போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆறுமுகசாமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்