மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்; உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2021-11-16 12:58 GMT
நிவாரண நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. சார்பில் வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க.வின் மாநில இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாய், தலையணை, போர்வை, அரிசி, மளிகை, காய்கறி, மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், சந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி

அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் அடங்கிய மளிகை தொகுப்பு, ரொட்டி மற்றும் பாய், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கினார்.

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நிவாரண பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தை சமாளிக்க போலீசார் பொதுமக்களை தடுத்ததால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பத்தினருக்கு நிவாரணமாக அரிசி-கோதுமை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். உயர் மட்ட செயல் திட்ட உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் போது மாற்று திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர வாகனங்கள், 22 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் மற்றும் 10 பேருக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்