திருவள்ளூரில் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

திருவள்ளூரில் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-19 14:16 GMT
போக்குவரத்து தடை

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே கனமழை பெய்தது. இதற்கிடையில் திருவள்ளூர் பெரியகுப்பம் வரதராஜ நகர் பகுதி மக்கள் மணவாளநகர் மற்றும் திருவள்ளூருக்கு சென்றுவர பெரியகுப்பம் பழைய தரைப்பாலம் வழியை பயன்படுத்தி வந்தனர். இந்த பாலம் மிகவும் பழமையான பாலம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதை தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

சாலை மறியல்

தற்போது ரெயில்வே துறை சார்பில் வரதராஜபுரம் செல்லும் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மணவாளநகர் மற்றும் திருவள்ளூருக்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரியகுப்பம் தரைபாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். ரெயில்வே துறை சார்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவரை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மேம்பாலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அந்த வழியாக வந்த 5-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதன் காரணமாக அந்த வழியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த வழியாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்