வேலூர், காட்பாடியில் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வேலூரில் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-19 19:56 GMT
வேலூர்

வேலூரில் மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்தது. அதனால் சேண்பாக்கம் இந்திராநகர், கன்சால்பேட்டை, அம்பேத்கர்நகர், பெரியார்நகர், மசூதிதெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வேலூர் மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சேண்பாக்கம் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் தாசில்தார், வடக்கு போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கால்வாய்களை தூர்வாரி மழைநீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார். அதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் சாலை மறியல்

இதேபோன்று வேலூர் -காட்பாடி சாலை தர்மராஜா கோவில் பின்புறம் உள்ள லாலாகுண்டா குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் மாலை 5 மணியளவில் வேலூர்- காட்பாடி சாலையில் நேஷனல் சந்திப்பு அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவிகமிஷனர் மதிவாணன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கால்வாய் அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் நாளை (அதாவது இன்று) அகற்றி மழைநீர் வெளியேற்றப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காட்பாடி

காட்பாடி தாலுகா ஜாப்ராபேட்டை ஊராட்சி மேல்வடுகன் குட்டை கிராமத்தில் கனமழை காரணமாக மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதிகாரியிடம் பலமுறை கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று மாலை நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதனால் தான் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இது பேரிடர் காலமாக உள்ளது. எனவே சிறிது காலம் கழித்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்