புன்னம் சத்திரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

புன்னம் சத்திரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-20 19:07 GMT
நொய்யல், 
கஞ்சா விற்பனை
புன்னம்சத்திரம் அருகே கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பொன்னையா கவுண்டன்புதூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் மதுரை முனிச்சாலை சிக்கந்தர் சாவடி 7-வது தெருவை சேர்ந்த கமலேஷ் (வயது 28) என்பதும், தற்போது புன்னம் சத்திரம் அருகே பெருமாள் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும் தெரியவந்தது. 
தப்பி ஓட்டம்
இதையடுத்து, கமலேஷை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கரூர் வேலுச்சாமிபுரம் சக்தி நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கமலேஷுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. 
இதனைதொடர்ந்து மணிகண்டன் வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். 
சிறையில் அடைப்பு
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து கமலேஷை கைது செய்தார். பின்னர் அவர் கரூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்