கார்களில் கடத்திய 42 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-21 17:24 GMT
கம்பம்: 

ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பம் வழியாக கேரளாவுக்கு கார்களில் கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயானந்த் தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு புறவழிச்சாலை பிரிவில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு அடுத்தடுத்து சென்ற 2 கார்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த கார்களில் கஞ்சா மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

 இதனையடுத்து கார்களில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அஜெஸ் (வயது 29), பாலக்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (40), சுஜேஸ் (32) என்று தெரியவந்தது. மேலும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்வதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 42 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்