கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ெரயில்களும் இயக்க விரைவில் நடவடிக்கை

கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ரெயில்களும் மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-22 07:10 GMT
ராமேசுவரம், 
கொரோனாவுக்கு முன்பு ஓடிய அனைத்து ரெயில்களும் மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் வந்தார். பின்னர் அவர் ரெயில்வே நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இதைதொடர்ந்து அங்கு ரெயில்வே இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த ராமேசுவரம் தாசில்தாரிடம், ரெயில்வே கோட்ட மேலாளர் ரெயில்வே நிலத்திற்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது தாசில்தார் மார்ட்டின் இதுகுறித்து எழுத்து பூர்வமாக ரெயில்வே துறை மூலம் கடிதம் ஒன்று தர வேண்டும் என கேட்டு கொண்டார். ஆய்வுக்கு பின்னர் கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- 
கொரோனாவுக்கு முன்பு வரையிலும் ஓடிய அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவது குறித்து ரெயில்வே கால அட்டவணையை பார்த்து பின்னர் தெரிவிக்கப்படும். 
அடிப்படை வசதி
ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை மேலும் மேம்படுத்துவது பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  ராமேசுவரம் ரெயில்வே நிலையம் அருகே ரெயில்வே இடத்தில் உள்ள ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் விரைவில் வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் அந்த அனைத்தும் அகற்றப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்