வாகன சோதனையில் ஈடுபட்ட கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி பலி

வாகன சோதனையில் ஈடுபட்டபோது கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-22 18:26 GMT
கரூர்
கரூர்
போக்குவரத்து ஆய்வாளர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 56). இவர் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கரூர் வையாபுரி நகரில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.  இந்தநிலையில், கரூர் நகருக்குள் பல்வேறு வாகனங்களில் அதிக அளவு ஆட்களை ஏற்றி கொண்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 
வேன் மோதல்
அதேபோல் நேற்று காலை கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலம் அருகே அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக ஒரு வேன் வந்தது. அந்த வேனை கனகராஜ் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். 
பலி
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக ெதரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கனகராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் அங்கு வந்து, கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, வேனை ஓட்டி வந்த டிரைவர் யார்? எதற்காக மோதி விட்டு நிற்காமல் சென்றார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்