பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்

Update: 2021-11-23 11:15 GMT
தூத்துக்குடி:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
குழந்தைகளுக்கு நிதியுதவி திட்டம்
தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா வைரஸ் தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் அந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கம் திட்டத்தை அறிவித்து உள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 74 குழந்தைகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், தாய், தந்தையை கொரோனாவால் இழந்த 4 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 70 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் ஆவர்.
இன்னும் பல இடங்களில் இந்த திட்டத்தை பற்றி அறியாதவர்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை, சி.டி.ஸ்கேன் நகல், மருத்துவமனைகளில் சேர்ந்ததற்கான அறிக்கை ஆகியவை இருந்தால் நிவாரணம் பெறுவதற்கு போதுமானது ஆகும்.
கலெக்டர் தலைமையில் குழு
மேலும் வறுமைக்கோடு பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து தகுதி உள்ள நபர்களா? என கண்டறிந்து வறுமைக்கோட்டில் இணைக்கப்பட்டு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் காசோலையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களது வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு, அவர்களுக்கு பராரிப்பு தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பராமரிப்பதற்கு யாரும் இல்லையென்றால் அரசு இல்லங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 6 ஆயிரத்து 800 குழந்தைகளுக்கு உதவித்தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
மாநில குழந்தைகள் கொள்கை
குழந்தைகள் தினத்தையொட்டி கடந்த 20-ந்தேதி தமிழ்நாடு மாநில புதிய குழந்தைகள் கொள்கை 2021-ஐ முதல்-அமைச்சர் வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக யாரும் பணி செய்யக்கூடாது. குழந்தைகள் பாலியல் சீண்டல், துன்புறுத்தல் உள்ளிட்டவைக்கு உள்ளாக்கப்படாமல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. 
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திட்டமிடுதல் நடைபெற்று வருகிறது. இந்த புதிய கொள்கை மீதான கருத்துகளை தமிழக அரசு திறந்த மனதோடு வரவேற்கிறது. எனவே, அனைத்து தரப்பினரும் புதிய கொள்கை மீதான கருத்துகளை கூறலாம்.
உடனடி நடவடிக்கை
குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை திறந்த மனதுடன் பெற்றோருடன் பேச வேண்டும். பெற்றோருடன் பேசுவதற்கு தயக்கம் இருப்பின் தமிழக அரசின் இலவச புகார் எண்ணான 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அதன் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தயக்கம் காட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-------

மேலும் செய்திகள்