complaint box

சாலை வசதி வேண்டும்

Update: 2021-11-23 21:36 GMT
தஞ்சை கரந்தை அருகே கொடிக்காலூர் பகுதியில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மண் பாதை வழியாக எடுத்து செல்லப்படுகின்றன. இந்த நிலையில் மழைக்காலங்களில் மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கொடிக்காலூர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வரகூர் கிராமம் வடக்கு தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர்த்தொட்டி பராமரிப்பின்றி கிடக்கிறது. குறிப்பாக குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து பாசிபிடித்துள்ளன. அதுமட்டுமின்றி குடிநீர்க்குழாயும், தொட்டியையும் இணைக்கும் குழாய் உடைந்து உள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், திருவையாறு.

தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புக்காரத்தெருவில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி கிடந்தது. மேலும், அந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகள் சாலையோரத்தில் குவிந்து கிடந்தன. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க வடிகாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது இந்த சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-பொதுமக்கள், கீழவாசல்.

மேலும் செய்திகள்