திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-24 07:33 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் வைத்திருந்த பெரிய பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 2½ கிலோ இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த நபரிடம் இருந்த ரூ.800-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் திருவள்ளூரை அடுத்த திருமழிசை உடையார் கோவில் தெருவை சேர்ந்த ஏபி என்கின்ற எபினேசன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் கூடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 1½ கிலோ இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபர்களிடம் இருந்த ரூ.800-ஐ பறிமுதல் செய்தனர். 

மேலும் போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருவள்ளூர் அடுத்த மாதவாக்கம், ஞானமங்கலம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் என்கிற வெள்ளை ஆனந்த் (28), திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்