கண்ணில் கருப்பு துணி கட்டி மகனுடன் பெண் தர்ணா

நகை கடன் தள்ளுபடி செய்யாததால் ஏமாற்றம் அடைந்து கண்ணில் கருப்பு துணி கட்டி மகனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் கூடலூர் கூட்டுறவு வங்கி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-24 14:06 GMT
கூடலூர்

நகை கடன் தள்ளுபடி செய்யாததால் ஏமாற்றம் அடைந்து கண்ணில் கருப்பு துணி கட்டி மகனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் கூடலூர் கூட்டுறவு வங்கி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

வட்டி கட்டவில்லை

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது கணவரின் மருத்துவ செலவுக்காக ஓவேலி பாரதி நகரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் உறவினரிடம் இருந்து வாங்கிய 43 கிராம் தங்க நகையை கூடலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து ரூ.89 ஆயிரம் கடன் பெற்றார். மேலும் மாதந்தோறும் வட்டி கட்டி வந்தார். 

இதற்கிடையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி அந்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் எதிர்பார்த்தார். இதனால் கடந்த 6 மாதங்களாக வட்டி கட்டவில்லை என தெரிகிறது. 

மகனுடன் பெண் தர்ணா

இந்த நிலையில் திடீரென பாக்கி உள்ள ரூ.9 ஆயிரம் வட்டியை செலுத்த வேண்டும் என்று ஜெகதீஸ்வரியிடம் வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதனால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினார். ஆனால் 3 கிராம் கூடுதலாக இருப்பதாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது. 

இதனால் ஜெகதீஸ்வரி தனது மகன் நிதிஷ்குமாருடன் கண்ணில் கருப்பு துணி கட்டி வங்கி முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் விரைந்து வந்து ஜெகதீஸ்வரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வங்கி உயர் அதிகாரிகளை சந்திக்க கூறினர். 

ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு

அப்போது ஜெகதீஸ்வரி கூறியதாவது:-
கட்டிட வேலைக்கு செல்லும் எனக்கு சொந்த வீடு கூட கிடையாது. ஆனால் எனது ரேஷன் கார்டில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர் என்று உள்ளது. இதுதொடர்பாக வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்தும் பலனில்லை. தற்போது மாதந்தோறும் வட்டியை முறையாக செலுத்தி வந்த நிலையில், முன்கூட்டியே வங்கி நிர்வாகம் உங்களது நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என தெரிவித்திருந்தால் வட்டியை கட்டாமல் விட்டு இருக்க மாட்டேன். 

இப்போது வட்டி மட்டும் ரூ.9 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். கூலி வேலைக்கு செல்லும் என்னால் அவ்வளவு பணம் எப்படி கட்ட முடியும்?. இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

பின்னர் ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனால் 11.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு தனது மகனுடன் ஜெகதீஸ்வரி வீட்டுக்கு சென்றார்.

மேலும் செய்திகள்