திருச்செந்தூர் அருகே சேதமடைந்துள்ள அரசு பள்ளிக்கட்டிடத்தால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

திருச்செந்தூர் அருகே சேதமடைந்துள்ள அரசு பள்ளிக்கட்டிடத்தால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

Update: 2021-11-24 14:35 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே சேதமடைந்துள்ள அரசு பள்ளிக்கட்டிடத்தால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளி
 திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பழுதாகியுள்ளன. மேலும் அந்த கட்டிடங்களின் மேற்கூரையும் சேதமடைந்து மழை பெய்தால், தண்ணீர் வகுப்பறைக்குள் விழுகிறது.
மாணவர்கள் அவதி 
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இந்த 2 வகுப்பறை கட்டிடங்களிலும் மழை நீர் விழுந்து, மாணவர்கள் உட்காரும் பெஞ்சு, மேஜைகள் மற்றும் கல்வி சாதனங்கள் உள்பட அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதனால் இந்த வகுப்பறைகளின் மாணவர்களை, மற்ற 2 வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது கொரோனா காலகட்டமாக இருப்பதால் வகுப்பறைகளில் அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி சமூக இடைவெளியுடன் உட்கார வைக்க முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களை சீரமைத்து கொடுத்து மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்